Saturday, September 22, 2012

தானம்!

தானம்!

மக்களுக்கு சில தாவரங்களும், விலங்கினங்களில் மாடும் அனைத்து வகைகளிலும் பயன் தருகின்றன. உதாரணமாக வாழையை எடுத்துக் கொண்டால், இலை நார், காய், பூ , தண்டு என அனைத்தும் உபயோகப் படுகின்றது. பசுவின் கோமியம், சாணம், தோல், கொம்பு, பால் என அனைத்தும் பயன் தருகின்றது! மேலும், காலையில் ஆலயங்களில் கோ பூசையும், மனிதர்கள் தங்களின் புதிய வீட்டிற்கு பசுவை அழைத்தும் கோ பூசையும் செய்து, மங்களமாய் வாழ , மதிப்பு கொடுக்கும் ஒரு ஜீவன்!

ஆலயங்களில் இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகளுக்காக பசுவையும் கன்றையும் தானம் செய்வது சிறப்பு! அதனை நிர்வாகத்தினர் பராமரிப்பதற்கும் தன்னால் ஆன தானங்களையும் செய்வது சிறப்பு!

வயதான முதியோர்களுள், பரம ஏழைகள் ஆதரவின்றி ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது கண்கூடு!
இவர்களை சில ஆசிரமங்களும், டிரஸ்ட்டுகளும் ஆதரவு கரம் கொடுப்பதுண்டு! இவர்களின் செலவினங்களுக்கு  நாம் நம்மால் ஆன உதவிகள் செய்தல் அவசியம்!

பனிரெண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள், விதவைகள், ஏழை முதியோர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்றனர். இவர்களை இனங்கண்டு, பிரதிபலன் எதிர்பாராமல், இறைவனுக்கு செய்யும் தொண்டாய் எண்ணி செய்தல் வேண்டும்! குறைந்த பட்சம் இருபத்தேழு குழந்தைகள், இருபத்தேழு விதவைகள், இருபத்தேழு முதியோர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ செலவினங்கள், ஆடைகள் என கொடுத்து உதவுவதனை தன் வாழ் நாளின் கடமைகளுள் ஒன்றாய் கருதி செய்தல் அவசியம்!

எத்தனையோ பிறவிகள் எடுத்திருப்போம்! பெற்ற தாய் தந்தையருக்கு, கட்டிய மனைவிக்கு, பெற்றெடுத்த பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டிருப்போம்! அதன் பொருட்டு இப்பரிகாராமாகவோ, மனத் திருப்திக்காகவோ, இவர்களுக்கு செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும் தொண்டாகவோ கருதி செய்தல் வேண்டும்!

கைவிடப்பட்ட அனாதைக் குழந்தைகள், சிறுவர் சிறுமியர்கள் இவர்களுக்கும் உதவிகள் பிரதிபலன் எதிர்பாராமல் செய்தல் வேண்டும்!

இன்று பௌர்ணமி நாட்களில் சிவாலயங்களில் கிரிவலம் வருதல் அதிகரித்து வருகின்றது! இத்தகைய நாட்களில் அன்னதானம், தண்ணீர் தானம், செய்வதும் சிறப்பு! நதிக்கரையோரம் உள்ள ஆலயங்கள் பெரும்பாலும் பரிகாரத்திற்குரிய ஆலயங்களாக இருக்கும். இத்தகைய தலங்களில், பௌர்ணமி தினத்தன்றும் செய்வதும் சிறப்பு! பௌர்ணமி தினத்தில் பசுவிற்கு வெல்லம் வழங்குதல், யானைக்கு வெல்லம், வழங்குதல் சிறப்பு!

கேளாமல் செய்வது தானம் என்பதனால், ஒருவரின் உள்ளம் குளிர எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வகையில் பிரதிபலன் எதிர்பாராமல் உதவுவதும் சிறப்பு.  

1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்
2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்
3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்
4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்
5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்
6. நெய் தானம் தர நோயைப் போக்கும்
7. பால் தானம் தர துக்கநிலை மாறும்
8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்
9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்
10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்
11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்
12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்
14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்
15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.

உபயோகித்த துணிகள் வழங்குவது தானம் அல்ல! புதிய ஆடைகள் வாங்கித்தருதல் தான் தானத்தில் சேரும். புதியதாய் செய்யப்பட்ட அன்னத்தினை தான் தருதல் வேண்டும். 

ஆலயங்களுக்கு, நெய், அபிடேகப் பொருட்கள் வழங்குவதும் சிறப்பு!
விளக்கேற்றுவதற்கு புதிய அகல்விளக்குகள், திரி, இவற்றையும் வழங்கலாம்! 

இவைகள் வாழுங்காலத்தில் செய்ய வேண்டிய தானங்கள்!

இறந்த பிறகு உடல் உறுப்புகளை தானம் செய்தல் அவசியம். இதற்கான விதிமுறைகள், எப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பதனை ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருந்தால் தான், உரிய நேரத்தில் இன்னொருவருக்கு பயன் தரும் வகையில் தானம் அமையும்!

அவசரகாலங்களில் உதவ இரத்த தானம் செய்தலும் முக்கியமென்பதனால், ஒவ்வொருவரும் தன்னுடைய இரத்த வகை தெரிந்து வைத்திருத்தல் அவசியம்!
இரத்த தானம் செய்வோர் மதுப் பழக்கம் இல்லாதவராக இருத்தல் அவசியம்!

தானம் செய்வோம்! பிறருக்கு உதவும் உன்னத உள்ளத்தினைக் கொண்டு, இறை அருளைப் பெறுவோம்!

7 comments:

ஆட்டோமொபைல் said...

தானங்கள் பற்றிய அருமையான பதிவு...

krishna ravi said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ!

இரவின் புன்னகை said...

அறிய தகவல்களை அற்ப்புதமாக தந்துள்ளீர்கள் நண்பா...

வாழ்த்துகள், நன்றி...

krishna ravi said...

நன்றித் தோழா!

ஆளுங்க அருண் said...

தானங்களைப் பற்றி அருமையாக எழுதி உள்ளீர்கள்.

கல்வி தானத்தைப் பற்றியும் சொல்லுங்க!

\\பனிரெண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள், விதவைகள், ஏழை முதியோர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்றனர். இவர்களை இனங்கண்டு, பிரதிபலன் எதிர்பாராமல், இறைவனுக்கு செய்யும் தொண்டாய் எண்ணி செய்தல் வேண்டும்!\\

தனது பெற்றோரைத் தவிக்க விட்டு செய்தால் அது தானமாகாது.

krishna ravi said...

தனது பெற்றோரைத் தவிக்க விட்டு செய்தால் அது தானமாகாது.

விடுபட்ட கருத்தை சொல்லி, பதிவினை முழுமை செய்தமைக்கு நன்றி என் இனிய சகோ!

திண்டுக்கல் தனபாலன் said...

நிதானத்துடன் தானங்கள் பற்றிய சிறப்பான பகிர்வை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா...

Popular Posts

Total Pageviews

சமீபத்திய பதிவுகள்!

Google+ Followers

Powered by Blogger.

Follow by Email

T

Contributors

Most Popular

Copyright © கிருஷ்ணாலயா | Powered by Blogger
Design by Saeed Salam | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates